தொழில்நுற்பம்

இரவில் விபத்தைத் தடுக்கும் கார் முன்விளக்குகள்

2011-11-23 07:40:00, comments: 0

இப்பொழுது காரில் இரவில் பயணம் செல்வதென்றாலே பயமாகத்தானிருக்கின்றது. மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தாற்போல் தான் இருக்கிறது.

காரணம் இரவில் செல்வது பகலில் செல்வதுபோல் அவ்வளவு சுலபமல்ல. இரவில் வாகனத்தில் செல்லும்போது நமக்கு முதல் எதிரியே தெளிவற்ற ஒளி தான். எவ்வளவு சக்திமிகுந்த விளக்குகளாக இருந்தாலும் வாகனத்தின் முன் குறிப்பிட்ட தூரம் வரைதான் நமக்கு ஓரளவு தெளிவாகத் தெரியும்.

மேலும் எதிரே வந்துகொண்டிருக்கும் வாகனத்திலிருந்து வரும் ஒளி நாம் செல்லும் வாகனத்திலிருந்து செல்லும் ஒளி இரண்டையும் `டிம்' செய்தாலும் அதைக் கடக்கும் வரை சிரமம் தான்.

இனி இரவில் செல்லும் வாகனங்களுக்கெல்லாம் விடிவு காலமாக புதிய வகை அகச்சிவப்புக் கதிர் ஒளி (Infra-red light) மற்றும் வெப்ப ஆற்றல் (Thermal Energy)  இவைகளைக் கொண்டு இரவில் செல்லும் வாகனங்களுக்கு கேமரா மூலம் தெளிவான தோற்றத்தை கொடுக்கிறது.

இந்த அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த இக்கருவிகளை Mercedes Benz மற்றும் BMW கார்களில் பொருத்தியிருக்கிறார்கள்.எந்த மழை நேரமானாலும், பனி மூட்டமானாலும் நாம் படு வேகத்தில் இக்கருவியின் உதவிக்கொண்டு செல்ல முடியும். பனிக் காலங்களில் அதிகமான விபத்துக்களை நாம் பார்த்திருக்கிறோம். காரணம் வாகனத்தில் செல்லும் நமக்கும் முன் ஒரு மீட்டர் வரைக்கூட தெளிவான தோற்றம் கிடைப்பதில்லை.

கடும் பனி பொழிவு காலங்களில் விமானம் கூட தரையிறக்கம் செய்ய மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே. எதிரே வருவது லாரியா, பேருந்தா, அல்லது சாலை வளைவா என்றக் கேள்விக் குறியிலேயேதான் நாம் செல்லவேண்டி வரும். ஆனால் இந்நூதன கருவியின் மூலம் எப்படிப்பட்ட மூடுபனியானாலும் வாகனத்தில் செல்லும் நமக்கு முன் சுமார் 300 மீட்டர் வரை தெள்ளத் தெளிவான தோற்றம் கிடைக்கிறது. இந்த அகச்சிவப்பு மற்றும் தெர்மமால் சக்தி கேமரா 1000 அடி வரை ஸ்கேன் செய்து ஓட்டுபவருக்கு திரையில் 300 மீட்டர் வரை தெளிவான தோற்றத்தை கொடுக்கிறது.

எவ்வளவு வேகத்திலும் இந்தக் கேமரா வேலை செய்யும் திறன் கொண்டது. குறைந்தபட்சம் வாகனத்தின் வேகம் மணிக்கு 8 கி.மீட்டர் செல்லும்போது இக்கருவி வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. ஆனால் மணிக்கு 8 கி.மீட்டர் அல்லது அதற்கு குறைந்த வேகத்தில் செல்லும்போது இது தானாகவே இதன் பணியை நிறுத்திவிடும்.


வெப்ப ஆற்றல் மூலம் இயங்கும் இக்கருவி காரின் இடது முன்புறத்தில் பம்பருக்கு கீழ் பொருத்தப்பட்டிருக்கும். BMW காரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியின் மூலம் எதிரே தென்படும் பொருட்கள், வாகனங்கள், மனிதன் மற்றும் விலங்குகள் இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பத்தைக் கொண்டு கேமராவிற்கு இதன் பிம்பங்களை அனுப்புகிறது. இதனால் எதிரே வருவது என்ன? என்ன தென்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

Mercedes Benz  காரில் பொருத்தப்பட்டிருக்கும் அகச்சிவப்பு கதிர் மூலம் வாகனத்தின் முன் விளக்குகளின் இலக்கை விட அதிகமான தொலைவிற்கு தெளிவான பிம்பத்தை கேமரா மூலம் அனுப்புகின்றது.

மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால், காரின் முன் விளக்குகள் கீழ்க்கண்ட தருணங்களில் தானாகவே `டிம்' செய்து கொள்கிறது.

1) எதிரே வாகனம் வரும்போது

2) நமக்குமுன் வாகனம் செல்லும்போது

3) சாலை விளக்குகள் போதிய பிரகாசத்துடன் இருக்கும் சாலையில் செல்லும்போது

4) எதிரே வாகனங்கள் நிற்கும்போது

புதிய புதிய ஆராய்ச்சிகளும் மனிதனுடைய இடர்களுக்கு சவால் விட்டுக்கொண்டுதானிருக்கின்றது. விலை மதிக்க முடியாத மனித உயிர் இவ்வாறான நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் மூலம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அந்தளவிற்க்கு நம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இவ்வாறான கருவிகள் மூலம் அதிகபட்சமான விபத்துக்களை தவிர்க்க முடியும். மேலும் நம் நாட்டிற்கு இது மிக மிக மிக அவசியம். (டிரைவர்கள் குடித்து விட்டு ஓட்டினால் என்னதான் நவீனக் கருவிகள் வந்தாலும் உயிர்சேதத்தை தவிர்க்க முடியாது). நம் நாட்டில் நடக்கும் விபத்துக்கள் பெரும்பாலும் இரவில் தான் நடக்கின்றது. இவ்வகை கருவிகள் வந்துவிட்டால் இது வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.

« back

Add a new comment

Manifo.com - free website building