தொழில்நுற்பம்

குற்றவாளிகளைக் கண்காணிக்கும் நவீன கருவி

2011-11-23 07:43:05, comments: 0

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பது கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப்பாடல். ஆனால் இப்பொழுது ஹதிருடனாய் பார்த்துதிருந்தாவிட்டால், ஜி.பி.எஸ். முறையை தவிர்க்க இயலாது' என்று சொல்கிறார்கள்விஞ்ஞானிகள்.

ஆம்! குற்றவாளிகளை கண்காணிக்கும் நூதன முறை கருவி வந்துவிட்டது. இது போலீஸ் துறைக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.

ஒரு இடத்தில் திருட்டு நடந்து விட்டால், உடனே நம் காவலர்கள் முதலில் செய்வது- திருட்டு நடந்த இடத்தில் வசிக்கும் முன்னாள்-இன்னாள் திருடர்கள் பட்டியலை தேடுவது தான்.திருட்டு நடந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் திருடர்களிடம் சந்தேகத்தின் பேரில் முதல்கட்ட விசாரணையை தொடங்குவார்கள். ஒரு முறை தவறு செய்தவன் மீண்டும் தவறு செய்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இந்த விசாரணை நடக்கிறது. முன்னாள் குற்றவாளிகளிடம் விசாரிப்பதன் மூலம் குற்றவாளி யார் என்பதை ஓரளவு அனுமானிக்க முடியும்.

ஒரு குற்றவாளி அடுத்தடுத்து தவறு செய்கிறானா? என்று கண்காணிக்க தனி அமைப்புகள் எதுவும் கிடையாது. குறிப்பிட்ட சில குற்றவாளிகளை மட்டும் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருவது உண்டு. அதுவும் சில காலத்துக்கு மட்டுமே இந்த கண்காணிப்பு இருக்கும். இன்னும் சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தினமும் அல்லது வாரம் அல்லது மாதம் ஒரு முறை போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆஜராகி கையெழுத்துப்போட்டு விட்டு செல்ல வேண்டும் என்ற கண்காணிப்பும் உண்டு. இருப்பினும் இதுவும் நீண்ட காலத்துக்கு வழக்கத்தில் இருப்பதில்லை.

எனவே ஒருவர் ஒரு குற்றத்தை செய்து அதற்குரிய தண்டனையை அனுபவித்த பின்னர் தொடர்ந்து அதே குற்றத்தை அவர்கள் செய்கிறார்களா? என்று கண்காணிப்பது சாத்தியப்படாத விஷயம். ரகசிய போலீஸ் இப்பணியை எல்லா நேரங்களிலும் எல்லா வழக்குகளிலும் செய்வது என்பதுவும் சாத்தியப்படாத ஒன்று.

பாலியல் பலாத்காரங்கள், திருட்டு, கொலை, கொள்ளைகள் பெரும்பாலும் ஒரே கும்பல் அல்லது ஒரே நபரால் திரும்ப திரும்ப செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் இவைகளை ஓரளவு குறைக்கலாம். பரோல்' மூலம் ஜெயிலில் இருந்து சில நாட்கள் மட்டும் விடுதலையாகி வருபவர்கள் தப்பிச் செல்வது உண்டு. அல்லது ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் தப்பி நாட்டை விட்டுச் செல்லவோ அல்லது மீண்டும் அதே குற்றத்தை தொடரவோ வாய்ப்புண்டு. இதெல்லாம் நம் போலீஸ் துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் சில.

அறிவியல் முன்னேற்றம் வளர வளர புதிய நூதன முறைகளையும் போலீஸ் துறையில் கையாண்டு வருகின்றனர். தவறு செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்பவர்களை விமான நிலையத்தில் மடக்கி பிடித்துவிட முடியும். அதாவது ஒருவர் தவறு செய்து விட்டு போலி பெயர் மற்றும் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்ப முயன்றால் அவர் மாட்டிக்கொள்வார். ஏன் என்றால் தற்போது பாஸ்போர்ட்டுகள் மிக நவீன முறையில் தயாரிக்கப்படுவதால் போலி பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பவர்கள் பிடிபட்டு விடுவார்கள். அடுத்தது குற்றவாளி ஒருவரின் அங்க அடையாளங்களை குறிப்பிட்டு முன்கூட்டியே விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டால் போதும். அவர்கள் அந்த தகவல்களை விமான நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துவிடுவார்கள். இது அந்த நாடு முழுவதும் உள்ள விமான நிலைய கம்ப்யூட்டர்களில் பதிவாகி இருக்கும். இதனால் அந்த அங்க அடையாளம் உள்ள ஒரு நபர் வரும் போது கம்ப்யூட்டர் எச்சரிக்கை செய்யும். எனவே இந்த குறிப்புகளை வைத்து குற்றவாளிகளை அதிகாரிகள் மடக்கி விடுவார்கள்.

தற்போது குற்றவாளிகளை கண்காணிக்க புதிய கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த தொழில் நுட்ப முறையில் சாட்டிலைட் மற்றும் வயர்லஸ் சாதனம் மூலம்  குற்றவாளிகளை கண்காணிக்கும் கருவியை கண்டு பிடித்துள்ளனர்.


இதன் மூலம் குற்றவாளியின் ஒவ்வொரு அசைவையும், நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும். ஒரு செல்போன் அளவு மட்டுமே இருக்கும் இக்கருவி குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரின் இடுப்பு பட்டையிலோ அல்லது காலிலோ பொருத்துவதன் மூலம் அவர்களைக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் குற்றவாளி எங்கு செல்கிறார் என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே போலீசார் கண்காணிக்க முடியும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சில இடங்களுக்கு போகக்கூடாது என்று போலீசார் தடை விதித்து இருக்கலாம். அந்த இடங்களுக்கு அவர்கள் சென்றால் அதை இந்த கருவி காட்டிக் கொடுத்து விடும்.

அதோடு, தடை செய்யப்பட்ட இடத்துக்குள் குற்றவாளி நுழைந்துள்ளார் என்றும் இந்த தகவல் தொடர்பு கருவி காவல் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து விடும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள்.

ஜி.பி.எஸ். கருவிகள் குறித்து வல்லுனர்கள் கூறுகையில், இதன்மூலம் குற்றங்களின் எண்ணிக்கைகள் குறைந்து விடும்', என்றனர். அமெரிக்காவில் இதுவரை 23 மாநிலங்களில் இந்த புதிய  முறையில் குற்றவாளிகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

'கடந்த சில மாதங்களில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது பலமடங்கு அதிகரித்துள்ளது', என்கிறார் ஸ்டீவ் சாபின். இவர் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு ஜி.பி.எஸ். (GPS) நிறுவனத்தின் தலைவர் ஆவார். இதுவரை 27 குற்றப்புலனாய்வு நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்ப வசதியை அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் சட்ட வல்லுனர்களின் தேசிய மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் 13 மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது குற்றவாளிகளை கண்காணிக்கும் ஜி.பி.எஸ். முறை மிகவும் அவசியம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதுதவிர ஆர்கன்ஸாஸ், ஜார்ஜியா, கான்ஸாஸ், விர்ஜினியா, வாஷிங்டன் மற்றும் மிச்சிகன் ஆகிய ஆறு மாநிலங்களில் சட்ட ரீதியாக இம்முறை அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சட்டமும் போடப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் இப்புதிய முறை ஏற்படுத்த உள்ளனர்.


இந்த ஜி.பி.எஸ். முறை மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பம் கொண்டதாகும். இக்கருவி கிட்டத்தட்ட ஒரு சிறிய செல்போன் அளவு கொண்டது. இந்த கருவியை குற்றவாளியின் உடலில் பொருத்தி விட்டால் போதும். இதில் இருந்து பெறப்படும் சிக்னல்கள் செயற்கை கோள் மூலமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும். இதன் மூலம் அந்த கருவி பொருத்தப்பட்டுள்ள நபர் எந்த நாட்டில், எந்த நகரில், எந்த தெருவில் இருக்கிறார் என்பதை போலீசார் சுலபமாக துல்லியமாக அங்குலம் அங்குலமாக கண்காணிக்க முடியும். இதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் மேற்கொண்டு தப்பிச்செல்லவோ, வேறு சதித்திட்டம் தீட்டவோ முடியாது. இது குற்றவியல் துறை மற்றும் காவல் துறையினரின் தலைவலியை குறைக்கிறது. இதற்கு முன் இருந்த ரேடியோ அலைகளின் மூலம்இயங்கிய கருவிகள் சில குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. அதாவது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை அதன் எல்லைக்குள்ளே மட்டும் கண்காணிக்கும். ஆனால் இந்த ஜி.பி.எஸ். முறையில் குற்றவாளிகள் டிமிக்கி' கொடுப்பது கடினம் தான்.

இது தவிர இந்த கருவி பொருத்தப்பட்ட நபர் சில இடங்களுக்கு (உதாரணமாக வங்கிகள், பள்ளிகள், விளையாட்டு மைதானம்) செல்லக்கூடாது என்று போலீசார் தடைவிதித்து இருந்தால் அந்த இடத்துக்கு செல்ல முடியாது. அதை மீறி அந்த நபர் இங்கு நுழைந்தாலே போதும், உடனே ஜி.பி.எஸ். கருவி செயற்கை கோள் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறைகள் இவைகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவோ செல்போன் மூலமாகவோ எச்சரிக்கை செய்தியை அனுப்பி விடும்.

அமெரிக்காவில் இம்முறையை அறிமுகப்படுத்திய பின்னர் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி கணிசமாக குற்றங்கள் குறைந்திருப்பதாக பென்சில்வேனியாவிலுள்ள குற்றவியல் துறை கூறுகிறது. மேலும் இம்முறைக்கு பல்வேறு ஏஜென்சிகளிலிருந்து ஏகப்பட்ட வரவேற்பும் இருக்கின்றது.

இந்த ஜி.பி.எஸ். கருவி கண்காணிப்பு முறையினால் இனி எல்லோருக்கும் விடிவுகாலம் தான். போலீஸ் துறையினரும் நிம்மதியாக பெருமூச்சு விடலாம். இந்த நவீன தொழில்நுட்ப முறையைக் கொண்டுவருவதன் மூலம் நிறைய தவறுகளை தடுக்க முடியாவிட்டாலும், தவறுகள் குற்றங்கள் நடைபெறுவதை குறைக்கலாம் என்பதை உறுதியாக சொல்லலாம். ஏனென்றால் சமீப காலமாக நிறைய இணைய தள நிறுவனங்களும், தொலைக்காட்சிகளும் லஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளை கையும் களவுமாக பிடித்துள்ளன என்பது இதற்கு உதாரணம். இனி வரும் காலங்களில் குற்றவாளிகளுக்கு காப்பு கிடையாது. ஜி.பி.எஸ். (GPS) காப்புதான்.

« back

Add a new comment

Manifo.com - free website building