தொழில்நுற்பம்

செல்போன் திருடர்களுக்கு எச்சரிக்கை!

2011-11-23 07:29:48, comments: 0

இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து விட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் அளவு கோல் செல்போன்' ஆகும். காணும் இடம் எல்லாம் பெரும்பாலும் அனைவரது கையிலும் நீங்காது இடம் பெற்றிருக்கும் அடையாளங்களில் ஒன்றாகவும் செல்போன் மாறிவிட்டது என்றும் சொல்ல முடியும். இதற்கு காரணம் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த தொலைபேசி குழந்தைகள் விற்கப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பும், விற்பனை அதிகரிப்பையும் செல்போன் நிறுவனங்களும், தகவல் தொடர்பு நிறுவனங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளையும், விலைக்குறைப்பும் செய்வதால் செல்போன் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கினறனர்.

இப்படி விற்பனையில் செல்போன் சாதனைப் படைத்தாலும் சில விஷயங்களில் அதற்கு ஆயுள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். தண்ணீரில் நனைந்தால் கண்டம். சற்று உயரத்தில் இருந்து தவறி விழுந்தால் பழுதாகும் வாய்ப்பும் அதிகம். அதிக கவனமுடன் பாதுகாத்தால் மட்டுமே செல்போன்கள் நீடித்த வாழ்வைப் பெற்றிருக்கும் என்பது உண்மை.

செல்போனில் பல வசதிகள் ((MMS, Email, PTT (Push to Talk), Web, Pocket PC) உள்ளன. இன்னும் பலருக்கு இது ஒரு தகவல் களஞ்சியமாகவே செயல்பட்டு வருகிறது. பலதரப்பட்ட ரகசிய எண்கள், ரகசிய தகவல்கள் போன்றவைகளை செல்போன்களில் சேகரித்து வைத்துக்கொள்கின்றனர். அதே நேரத்தில் கொஞ்சம் அசந்து மறந்து வைத்து விட்டால், அதனை அபேஸ் செய்யும் திருடர்களும் இன்று பெருகி ஒரு பெரிய கூட்டமாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றனர்.

செல்போன் கிடைத்து விட்டால் போதும், உடனே அதிலிருந்து சிம் கார்டை எடுத்து வெளியில் எறிந்து விட்டு ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்று விடுகின்றனர். இதனை ஒரு தொழிலாகவே செய்து கொண்டிருக்கும் கும்பலும் உள்ளது. இவர்களின் திருட்டு செல்போனை வாங்குவதற்காகவே, பல இரண்டாந்தர செல்போன் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இவர்கள் திருட்டு செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கி அதனை நல்ல விலைக்கு விற்று (கொள்ளை) லாபம் சம்பாதிக்கின்றனர்.

இப்படி திருடர்கள் கூட்டம் ஒருபக்கம், இவர்களிடம் செல்போனை தொலைத்து விட்டு ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்த செல்போன் திருட்டுக்கு முடிவுகட்டும் வகையில் மென்பொருள் ஆய்வாளர்கள் தற்போது ஒரு புதிய ரக செல்போன் தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். ஆமாம்ங்க! இந்த புதிய தொழில்நுட்பம் செல்போன் திருட்டை ஒழிக்கும் ஆயுதமாக ரெடியாகிவிட்டது.

நீஙகள் செல்போனை தொலைத்து விட்டால் ஒன்றும் கவலைப்படத்தேவையில்லை. உங்களின் ரகசிய சேமிப்புகளை திருடர்கள் கண்டுபிடித்து விடுவார்களோ? என்கிற பயமும் இனி உங்களுக்குத்தேவையில்லை. இந்த புதிய வகை தொழில் நுட்பத்தில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளுதல் (Self Distrust ) என்கிற புதிய முறையினை அறிமுகப்படுத்தி உள்ளனர். திருடு போன செல்போனிற்கு ஒரு ரகசிய செய்தி அனுப்பிவிட்டால் போதும். இந்த செல்போன் தன்னிடமுள்ள அனைத்து தகவல்களையும் தொலைபேசி எண்கள், ரகசிய தகவல்கள் மற்றும் சேமித்து வைத்துள்ள அனைத்தையும் அழித்து விட்டு அந்த செல்போனை பயன்படுத்த முடியாதவாறு அதனை முடக்கி வைத்து விடும்.

செல்போனிலிருந்து சிம் கார்டை எடுத்து விட்டு புதிய சிம் கார்டு போடநினைத்து அதிலிருந் சிம்மை உருவினால் போதும் பீய்ங்.... பீய்ங்.... பீய்ங்... என அலறி இது திருடப்பட்ட செல்போன் என்பதனை சொல்லாமல் சொல்லிவிடும்.

இந்த புதிய வகை தொழில்நுட்பம் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் (Remote Xt) செல்போன் பிரியர்களின் ஒரு வரப்பிரசாதமாகும். இங்கிலாந்தில் இந்த வகை செல்போன் தொழில்நுட்பத்திற்கு போலீஸ் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 7 லட்சம் செல்போன்கள் திருட்டு போவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதன் மொத்த மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். மேற்கத்திய நாடுகளில், அதிகமாக செல்போன்கள் திருட்டு போவதற்கு காரணம், செல்போன்களில் உள்ள வசதிகள் (Camera, MP3 Song, Radio) மற்றும் அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களும் இருப்பதுதான். இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயமும் இருக்கின்றது. என்ன தெரியுமா? இந்த செல்போன் திருடர்களில் 50 சதவீதம் பேர் பருவ வயதில் இருக்கும் இளைஞர்களாம். இது ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை!.

இந்த தொழில் நுட்பத்தின் (Remote Xt)மூலமாக பிரிட்டனில் செல்போன் திருட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வருடத்திற்கு செலவிடக்கூடிய தொகை 1200- ரூபாய் மட்டுமே. அதாவது மாதத்திற்கு 100 ரூபாய் செலுத்தினால் போதும். உங்கள் செல்போன் திருடர்களிடமிருந்து பாதுகாக்கப்படும்.

இந்த தொழில்நுட்ப (Remote Xt) சேவை மையத்தில் இந்த பணத்தை செலுத்தி செல்போனை பதிவு செய்துகொண்டால் போதும். இந்த சேவை மையம், உங்களின் தொலைபேசி எண்கள், தொடர்பு எண்கள், செய்திகள் போன்ற உங்கள் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களையும் சர்வரில் (External Server) ல் சேமித்து வைத்து விடுவார்கள். ராணுவ ரகசியங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. இதனை அவ்வளவு எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது.

செல்போனை தொலைத்தவர் இந்த சேவை மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை சொன்னால் போதும், சேவை மையத்திலிருந்து திருட்டுபோன செல்போனிற்கு கட்டளை  அனுப்பி வைக்கப்படும். அவ்வளவு தாங்க! உங்களின் செல்போனில் சேகரித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் அழித்து விட்டு செல்போனை முற்றிலுமாக செயல்படாத வகையில் முடக்கி வைத்துவிடும் இந்த புதிய தொழில்நுட்பம்.

அதோடு மட்டுமல்ல, திருடர்கள் அதிலிருந்த சிம் மை மாற்ற நினைத்து உருவினால் போதும், பீய்ங்.....பீய்ங்... என்று கத்த ஆரம்பித்து விடும். செல்போனிலிருந்து பேட்டரியை கழற்றினால் தான் இந்த அலறல் நிற்கும். சரி அலறல் நின்று விட்டதே என்று நினைத்து மீண்டும் பேட்டரியை இணைத்தால் போதும், மீண்டும் கத்த ஆரம்பித்து விடும். இப்படி கத்தினால், எப்படிங்க செல்போனை திருடுவாங்க?

செல்போனை தொலைத்தவர் மீண்டும் புதிய செல்போனை வாங்கிவிட்டு சேவை மையத்தை தொடர்புகொண்டால் போதும், தொலைந்து போன செல்போனில் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் புதிய செல்போனுக்கு வந்து விடும்.

அய்யோ! முக்கியமான நம்பர் வைத்திருந்தேன் போயிடுச்சே!, முக்கியமான தகவல் இருந்தது, செல்போனோட சேர்ந்து அதுவும் போயிடுச்சிப்பா!, என் காதலியோட போட்டோ போயிடுச்சே! என்று சில பேர் வேதனைப்படுவார்கள். இப்படி புலம்புபவர்கள் இனிமேல் கவலைப்படவே தேவையில்லை. எல்லாமே புதிய செல்போனுக்கு திரும்பி வந்துவிடும்.

இந்த புதிய தொழில் நுட்பத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து செல்போன்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக செல்போன் திருட்டுத் தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்கிறார் இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மார்க் ஒயிட்.

செல்போன் திருட்டை ஒழிக்கும் இந்த புதிய தொழில் நுட்ப முறை நம்ம நாட்டுக்கும் சீக்கிரமே வந்து விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

« back

Add a new comment

Manifo.com - free website building