தொழில்நுற்பம்

பறக்கும் ரெயில்கள்-2

2011-11-23 07:23:01, comments: 0
 

கடிகாரத்தின் முட்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடும் மனிதன் எதிலும் வேகம்... வேகம்... என்று அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறான்.

மனிதனின் சிந்தனை வேகத்துக்கு ஏற்ப அவன் பயணம் செய்யும் வாகனங்களின் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது அந்த வகையில் மனிதனின் தயாரிப்புகளில் ஒன்று தான் 'புல்லட்" டிரெயின் எனப்படும் அதிவேக பயணிகள் ரெயில். அறிவியல் அதிசயம் பகுதியில் கடந்த வாரம் அதிவேகமாக செல்லும் ரெயில்கள் பற்றிய தகவல்களை அறிந்தோம். இந்த வாரம் சீனாவில் 'மேக்லிவ்" முறையில் இயங்கும் அதிவேக ரெயில்கள் பற்றியும் இறக்கை பொருத்திய பறக்கும் ரெயில் பற்றிய தகவல்களையும் காண்போம்.பறக்கும் ரெயில்-2

அதிவேக ரெயில்களில் மேக்லிவ் ரெயில்கள் சீனாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. 70 வருட ஆராய்ச்சியில் உருவான மேக்லிவ் ரெயில்கள் சராசரியாக மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகமும், அதிகபட்சமாக 430 கிலோ மீட்டர் வேகமும் செல்லக் கூடியவை.

ஷாங்காய் நகரில் ஓடும் மேக்லிவ் ரெயிலில் முதலில் பயணம் செய்த பயணிகள் இது ரெயிலா? அல்லது விமானமா? என்று ஆச்சரியப்பட்டனர். அந்த அளவுக்கு மேக்லிவ் ரெயிலின் வேகம் இருந்தது. இதன் வேகத்திறனை பார்த்து அசந்து போன பயணிகள் ஆகா அற்புதம், பிரமாதம் என்று புகழ்ந்தனர். அது மட்டுமல்ல, அதை 'நிலத்தில் பறக்கும் விமானம்" என்றும் 'இறக்கை இல்லாத விமானம்" என்றும் பாராட்டினார்கள்.

மின் காந்த விசை மூலம் ரெயிலை தண்டவாளத்தில் இருந்து மேல் நோக்கி உயர்த்தி மிதந்து செல்லும் (பயண) முறைக்கு மேக்லிவ் முறை என்று பெயர். ஜெர்மன் நாட்டு பொறியியல் நிபுணர்களின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் மேக்லிவ் ரெயில். மேக்லிவ் தொழில்நுட்பம் மற்ற அதிவேக ரெயில்களைவிட பல மடங்கு மேலானது. அந்தரத்தில் மிதந்து செல்வதால் மற்ற ரெயில்களைப் போல் தண்டவாளத்திற்கும் சக்கரத்திற்கும் நேரடித் தொடர்பு கிடையாது என்பதால், ஓடும்போது உராய்வு விசையால் ஏற்படும் ஆற்றல் இழப்புக் கிடையாது. ஓடும்போது ஏற்படும் இரைச்சல்களும் மிகவும் குறைவு. அதுமட்டுமல்ல மற்ற அதிவேக ரெயில்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்கத் தேவைப்படும் சக்தி திறன் மேக்லிவ் ரெயில்களோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவு. மற்ற அதிவேக ரெயில்களில் மோட்டார்கள் ரெயிலில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் இதில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருப்பதால் செங்குத்தான பகுதியில் மட்டும் மோட்டார் திறனை அதிகப்படுத்தி விட்டால் போதும் எளிதாக மேலேறி விடும். இதனால் சுரங்கப்பாதை அமைக்கவேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வளவு பயன்கள் இருந்தாலும் பொருளாதார சிக்கன வழிகளில் இது மிகவும் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் பிற அதிவேக ரெயில்கள் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது. பாதுகாப்பு விஷயங்களிலும் மிகவும் மேம்பட்டுத் திகழ்கிறது. இந்த மேக்லிவ் ரெயில்களை இயக்க தேவைப்படும் அடிப்படை வசதிகளை புதிதாக அமைக்க வேண்டும். இதனால் பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன. ஆனால் மற்ற அதிவேக ரெயில்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களில் இயக்க முடியும். இதன் திறனை மேம்படுத்த வேண்டுமென்றால் ரெயிலின் வடிவமைப்பை மட்டும் மாற்றி அமைத்தால் போதுமானது.

இதன் காரணமாக மேக்லிவ் ரெயில்களை அறிமுகப்படுத்த பல நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.அதிவேக ரெயில்களின் சந்ததியில் அடுத்துவரப்போகும் ரெயில் என்ன தெரியுமா? நீராவியின் உதவியுடன் தன் பயணத்தை துவங்கி, தத்தித் தவழ்ந்த ரெயில்கள் படிப்படியாக நடந்து அதன் பிறகு ஓடி, இன்று டீசல் வகை, மின்சார வகை, காந்த வகை என்று பல்வேறு அவதாரம் எடுத்து அடுத்த அவதாரமாக வரப்போகிறது 'ஆகாய ரெயில்".

ரெயிலில் அமர்ந்து மணிக்கு 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் அப்படியே சொகுசாக காற்றில் மிதந்து சென்றால் எப்படியிருக்கும்?

இதை நினைக்கும்போதே நம் மனது எவ்வளவு குதூகலிக்கிறது. ஜப்பானில் சென்டாய் நகரத்தில் உள்ள தோஹஹ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யசூக்காய் கொஹாமா என்பவரின் ஆராய்ச்சியால் இது போன்ற 'பறக்கும் ரெயில்" வரவிருக்கிறது. ரெயில்கள் இயங்குவதற்கு உதவும் பொறிகள்  நீராவி, டீசல் மற்றும் மின்சாரம் கொண்டு இயங்குபவை. மின்சார ரெயில்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்டு சக்கரங்களை தண்டவாளத்தில் ஓட வைத்து ரெயிலை இயக்குகிறது. இந்த முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் சில ரெயில்கள் அதிவேகத்தில் இயங்குகிறது. இந்த வகை ரெயில்களில் ஒன்றான நொஹோமியின் உச்சவேகம் மணிக்கு 300 கிலோ மீட்டர் ஆகும். இவற்றின் அடுத்த அவதாரமே காந்தம் கொண்டு மிதந்து ஓடும் மேக்லிவ் ரெயில்கள். மேக்லிவ் ரக ரெயில்கள் அதிவேகமாகவும், சொகுசாகவும் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், இதனை இயக்க அதிக அளவில் மின்சாரம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் தோஹாமாவில் பறக்கும் ரெயில் எளிதான வடிவமைப்பை கொண்டதாக இருக்கப்போகிறது. இதற்கு 'நிலப்பரப்பில் சிறகடிக்கும் இறக்கை" என்றே பெயர் வைத்து விட்டார்கள். இந்த ரெயில் 'L" (ஆங்கில எழுத்தான எல்) வடிவமுடைய இறக்கையின் மேல்செல்லும், இறக்கையின் அடிப்பாகம் ரெயிலைத் தூக்கி நிறுத்த தேவையான விசையைக் கொடுக்க, நிலத்திலிருந்து 5.10 செ.மீ உயரத்தில் ரெயில் மிதக்கும். பக்கவாட்டு இறக்கைகள் ரெயிலை அதன்பாதையில் நிலைநிறுத்த உதவி புரிகிறது. இங்கு தண்டவாளங்களுக்குப் பதிலாக சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் முழு இயக்கமும் தானியங்கி முறையில் இருக்கும். முன்னோக்கி செல்வதற்காக இயக்குவிசை இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. இதன் சக்கரங்கள், விமானத்தின் ஓடுதள இறக்குக் கருவி (LANDING GEAR)யின் இயக்கத்தை ஒத்து இருக்கும். ரெயில் நிலையத்திற்கு அருகே வந்தவுடன் சக்கரங்கள் கிழிறங்கி ஓடத்துவங்கும்.


சோதனை ஓட்டத்திற்காக மாதிரி ரெயிலை வடிவமைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கொஹாமா. முதலில் இயக்குவிசை இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் (மிதப்பதற்குமுன்) இந்த 'மாதிரி ரெயில்" இயக்கப்பட்டது. ஆராய்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் எப்படியும் இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்கள். இது வெற்றியடைந்தால் 2020_ம் ஆண்டில் இந்த பறக்கும் ரெயில் 335 பயணிகளுடன் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் தன் பயணத்தை துவங்கும்.

அதிவேக ரெயில்களின் சாகசங்களைப் படித்து நம்முடைய நாட்டிலும் இதுபோல் ரெயில்கள் எப்பொழுது வரப்போகிறது என்று ஏக்கப் பெருமூச்சு வருகிறதா?

இன்று நம்முடைய ரெயில்களின் செயல்பாடுகள் மிகவும் மகத்தான சாதனைகள் புரிந்து வருகின்றன. இருந்தாலும் 'பயணக்காலம்" என்று வரும்பொழுது சோதனையாகத்தான் முடிகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு உள்ள 500 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 10 மணி நேரம் ஆகிறது. இதுதவிர தடம் புரள்வது, விபத்து மற்றும் மூடுபனி காலங்களில் கேட்கவே வேண்டாம். இதுவே 'புல்லட் ட்ரெயின்" மேக்லிவ் வகை ரகங்களாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிட முடியும். விண்வெளி வரை சென்று சாதனை படைத்த நமக்கு இது ஒன்றும் பெரிய காரியம் கிடையாது. நம்மிடையே இந்த மாதிரி திட்டங்களை செயல்படுத்த முனைப்பும், தொலைநோக்குப் பார்வையும் தேவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அதிவிரைவு ரெயில்கள் வந்தால் நம் நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களையும் குறைந்த பணத்தில் சில மணி நேரத்தில் சென்றடைந்து விட முடியும். இதனால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் முதலிடத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. நம் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு திட்டமான இந்தியா 2020 என்ற தொலை நோக்குத் திட்டத்திற்கு பக்கபலமாக நின்று இந்தியாவை ஒரு பொருளாதார வல்லரசாக உருவாக்க இதுபோன்ற திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறமுடியும்.

« back

Add a new comment

Manifo.com - free website building