தொழில்நுற்பம்

புறாக்களை பயன்படுத்தி அறிவியல் ஆய்வுகள்

2011-11-23 07:33:02, comments: 0

நினைத்த உடன் நினைத்த நபருடன் பேசும் வசதி இப்போது உள்ளது. அதற்கு ஏற்றார்போல நவீன கண்டுபிடிப்புகளான மொபைல் போன்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளன. தொலைபேசி மற்றும் தந்தி கருவிகளை கண்டுபிடிப்பதற்கு முன்பு இருந்த நிலையே வேறு. தகவல் எழுதிய காகித்தை புறாவின் காலில் கட்டி அனுப்பினார்கள். இதற்காக புறாக்கள் தனியாக வளர்க்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்டன.

மன்னர்கள் காலத்தில் தகவல் தொடர்பு பணிகளை புறாக்கள் தான் அதிகமாக கவனித்து வந்தன. பக்கத்து நாடுகளில் இருந்து நேச நாட்டு மன்னர்கள் அல்லது தூதுவர்கள் புறாவின் மூலமாகவே செய்திகளை அனுப்பி வந்தனர்.

காதல் ஜோடிகளும் தங்களது காதலை புறா விடு தூது மூலமே வளர்த்தனர் என்று சங்க கால காதல் பாட்டுக்கள் கூறுகின்றன.

மனிதர்களின் நல்ல தோழனாக இருக்கும் விலங்குகள், பறவைகளில் புறாக்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இன்றும் புறா வளர்ப்பது முக்கியமான பொழுது போக்காக திகழ்கிறது.

தமிழகத்தின் பல நகரங்களிலிலும், கிராமங்களிலும் இன்றும் புறாக்களை வளர்க்கின்றனர். இது தவிர சிலர் புறாக்களை பந்தயங்களுக்காகவும் வளர்க்கின்றனர். பந்தயங்களுக்காக வளர்க்கப்படும் புறாக்கள் நீண்ட தூரத்தை ஒரே மூச்சாக பறந்து வந்து சாதனைகள் படைக்கிறது.

இந்தியா உள்பட பல நாடுகளில் புறாக்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு வரும் போது அமெரிக்க விஞ்ஞானிகள் புறாக்களை பயன்படுத்தி விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இது பற்றிய விவரங்கள் வருமாறு:-

அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில் உள்ளது இர்வின் பல்கலைக்கழகம். இங்கு உதவி பேராசிரியராக பணிபுரிபவர் பியட்ரிஸ் டா காஸ்டா. இவரது தலைமையில் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் விண்வெளியில் உள்ள மேகங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் மேகங்கள் மற்றும் பனி மூட்டம் காரணமாக அடிக்கடி விண்வெளி போக்குவரத்து மற்றும் பிற பணிகள் பாதிக்கப்படுகின்றன. வானிலை ஆய்வு மையங்கள் மூலம் பனி மூட்டம் எப்போது ஏற்படும் என்பது பற்றிய ஆய்வுகள் நடந்து வந்த போதிலும் பனி மூட்டம் ஏற்படும் நேரத்தை துல்லியமாக கணிக்க முடியவில்லை. மேலும் இந்த ஆய்வுக்காக சில மணி நேரங்களுக்கு ஒரு முறை ஆய்வுக்கருவிகளை விண்வெளிக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.


அதாவது பலூன் ஒன்றில் தட்ப வெப்ப உணரி (சென்சார்) கருவிகளை வைத்து விண்வெளியில் பறக்க விடுவார்கள். இந்த பலூன் விண்வெளியில், மேகக்கூட்டங்களுக்கு நடுவே பறந்தபடி அங்குள்ள ஈரப்பதம் மற்றும் தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களாக அனுப்பும். இந்த தகவல்களின் அடிப்படையில் அன்றைய தினம் மழை வருமா? காற்றின் வேகம் எப்படி இருக்கும்?, காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு எவ்வளவு இருக்கும்?... என்பது உள்பட சில முக்கிய தட்ப வெப்ப தகவல்களை அறிய முடியும். சில நேரங்களில் இவ்வாறு பலூன்கள் மூலம் பெறப்படும் தகவல்கள் மாறுதலுக்கு உள்ளாவதும் உண்டு. எனவே உடனுக்குடன் தகவல்களை பெற்று அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு பனி மூட்டம் மற்றும் மேகங்கள் இயக்கம் பற்றிய தகவல்களை தரமுடியும். விமான போக்குவரத்துக்கு பனி மூட்டம் பற்றிய தகவல்கள் மிக முக்கியம் என்பதால் இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தினார்கள். அப்போது தான் பலூன்களுக்கு பதிலாக புறாக்களை பயன்படுத்தி வானிலை பற்றிய விவரங்களை சேகரிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. புறாக்களின் உடலில் கருவிகளை பொருத்தி அவற்றை மேகக்கூட்டங்களுக்கு நடுவில் பறக்க விடுவதன் மூலம் பனி மூட்டம் மற்றும் பிற தட்ப வெப்ப தகவல்களை பெற முடியும் என்ற கருத்து எழுந்தது.


இதையடுத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்கள் பல்கலைக் கழகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றின் உடலில் சில ஆய்வுக்கருவிகளை பொருத்தி பறப்பதற்கான பயிற்சிகளை அளித்தனர். அதாவது புறாக்களின் உடலில் எடை குறைந்த ஜி.பி. ஆர்.எஸ். கருவி மற்றும் சிறிய கேமிரா மற்றும் காற்றின் வேகம், ஈரப்பதம் அறியும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டன. பின்னர் இந்த புறாக்கள் பறக்க விடப்பட்டன. அவை குறிப்பிட்ட நேரம் விண்வெளியில் பறந்தன. அப்போது அவற்றின் முதுகில் உள்ள கருவிகளில் தட்ப வெப்ப நிலை பற்றிய தகவல்கள் பதிவாகின. மேலும் அந்த தகவல்கள் உடனுக்குடன் தரையில் உள்ள ஆய்வு நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வு செய்து வானிலை குறித்த தகவல்களை தயார் செய்தனர்.

புறாக்களை பயன்படுத்தி நடைபெற்ற ஆய்வுகள் முதல் கட்ட வெற்றியை தந்துள்ளது. அடுத்த கட்டமாக புறாக்களை பயன்படுத்தி வானிலை தொடர்பான ஆய்வுகளை விரிவு செய்ய விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

புறாக்களை பயன்படுத்தி ஆய்வுகள் நடத்துவதை மிருகவதை தடுப்பு அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இருப்பினும் விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை தொடர்ந்து நடத்துகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் என்ன தெரியுமா? விரைவில் எந்திர புறா (ரோபோ புறா) தயாரித்து விடுவோம். அப்போது அந்த எந்திர புறாக்கள் விண்வெளியில் பறந்து சென்று தகவல்களை திரட்டித் தரும் என்கிறார்கள்.

(அதிசயம் தொடரும்)


 
போலீஸ் புறா


மன்னர் காலத்தோடு புறாக்களை பயன்படுத்தி தகவல்களை அனுப்புவது முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். ஒரிசா மாநில போலீசார் இன்றும் புறாக்களை பயன்படுத்தி சில வேலைகளை செய்கின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த போது ஒரிசா மாநிலத்தில் இருந்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் புறாக்களை பயன்படுத்தி தகவல்களை அனுப்பி வந்தனர். குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் போது போர் முனைக்கு தகவல்களை அனுப்பும் முக்கிய பணிகளுக்கு புறாக்கள் தான் பயன்படுத்தப்பட்டன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இங்கிலாந்து அதிகாரிகள் நாடு திரும்பும் போது புறாக்களை ஒரிசா போலீசிடம் ஒப்படைத்து விட்டுச்சென்றனர். போலீசாரும் அந்த புறாக்களை பத்திரமாக இன்று வரை பராமரித்து வருகிறார்கள். கட்டாக் நகரில் இதற்கு என்று ஒரு தனி பிரிவே இயங்குகிறது. இங்கு புறாக்கள் பராமரிக்கப்பட்டு நன்றாக வளர்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு வசதிகள் மேம்பட்ட நிலையிலும் புறாக்களை பராமரித்து வருகின்றனர்.

« back

Add a new comment

Manifo.com - free website building