தொழில்நுற்பம்

விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை துரத்தி பிடிக்கும் நவீன கருவி

2011-11-23 07:44:23, comments: 0

போக்குவரத்து என்றாலே விபத்துகள் வாடிக்கை என்ற நிலையாகி விட்டது. எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் 100 சதவீத பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிகழ்கிறது. அரசு விபத்துகளை குறைக்க என்னதான் புதிய தொழில்நுட்பம் மற்றும் சட்டங்களை புகுத்தினாலும் மக்களின் அறியாமை, அலட்சியம், போக்குவரத்து விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காமை போன்றவற்றால் விபத்துக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

சில சமயம் விபத்துகள் எதிர்பாராமல் நடப்பதுண்டு. இயற்கையின் சீற்றத்தாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் அலட்சியத்தால்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இப்படி அலட்சியத்தால் செய்யும் தவறுகள் ஏராளமான உயிர்களையும் உடமைகளையும் பலி வாங்கி விடும். இத்தனை இழப்புகளையும் ஏற்படுத்திய ஓட்டுனர்கள், அதிகாரிகள் லாவகமாக தப்பி விடுவதும் உண்டு. சில சமயம் ரேடார்கள், விபத்து தடுப்பு சாதனங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டாலும் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

முன்பெல்லாம் வேகத்தடையைத் தவிர வேறு எந்த விபத்து தடுப்பு நடவடிக்கையையும் நாம் பார்க்க முடியாது. இந்த வேகத்தடைகள் சில நேரங்களில் இரவில் வேகமாக வரும் வாகனங்களை விபத்துக்குள்ளாக்கிவிடும். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட ஏற்பட அதிநவீன கருவிகள் போக்குவரத்து துறையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தக் கருவிகளின் துணையால் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு செய்திகளை உடனுக்குடன் அனுப்பி விபத்து பற்றிய விபரங்களை பதிவு செய்ய முடிகிறது.

நகரங்களிலும், மேலை நாடுகளிலும் தற்பொழுது சாலைகளில் கேமிராக்கள் மூலம் வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டுபிடிக்கின்றார்கள். ஆனாலும் பெரிதாக விபத்துக்களும், போக்குவரத்து குற்றங்களும் குறைந்த பாடில்லை.


இதெற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக அமெரிக்காவின் விர்ஜினியாவிலுள்ள ஸ்டார்சேஸ் என்ற நிறுவனம் ஒரு நூதனமான கருவியைக் கண்டுபிடித்துள்ளது. ALE -ன் உதவியைக் கொண்டு செயல்படும் இந்த கருவி போலீஸ் துறையின் 90 சதவீத வேலையை சுலபமாக்கிவிடுகிறது. விபத்து மட்டும் அல்ல, எந்த குற்றம் செய்துவிட்டு தப்பினாலும் இதே முறைதான் பயன்படுத்தப்படும். இதனால் குற்றவாளிகள் தப்பி செல்வது என்பது மிகவும் கடினமாகும்.

இந்த நிறுவன கருவியை உபயோகித்தால் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்லும் வாகனங்களை சுலபமாக மடக்கி விடலாம். அதுமட்டுமல்ல அந்த வாகனம் எங்கெங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு செய்திகளை அனுப்பலாம். முன்பெல்லாம் தப்பிச் செல்லும் வாகனத்தை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் அடுத்த கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது அடுத்த காவல் நிலையத்திற்கோ போன் மூலம் உடனே தகவல் கொடுத்து மடக்கி பிடிப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள். இதனால் வரும் வாகனங்களையெல்லாம் எந்த வாகனம் என்று தெரியாமல் சோதனையிடுவதிலேயே நேரம் செலவாகிறது. இதனால் போக்குவரத்திற்கும் பெருமளவு இடைஞ்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில் தப்பியவர்கள் மாற்றுப் பாதைகள் வழியாக வேறு இடத்திற்கு சென்று விடலாம். அல்லது வாகனங்களின் முக்கிய தடயங்களை மாற்றி விட்டு பயணம் செய்தால் போலீஸ் அதிகாரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.


இம்மாதிரியாக தப்பிக்கும் வாகனங்களை தொடர்ந்து துரத்தி செல்லும் போலீஸ் அதிகாரிகள் கருவியை உபயோகித்து முன்செல்லும் காரில் பின்புறத்தில் ஒட்டுகின்ற எலக்ட்ரானிக் ஸ்டிக்கரை அம்பு எய்வது போல அல்லது துப்பாக்கி சுடுவது போல எய்து ஒட்டிவிடுவார்கள். அதாவது பின்னால் துரத்திவரும் போலீஸ் அதிகாரி இந்தக் கருவியினுடைய பட்டனை அழுத்தினால் போதும், உடனே குபீரென்று ஒரு எலட்ரானிக் ஸ்டிக்கர் பாய்ந்து செல்லும். இது தப்பிச்செல்லும் காரின் பின்புறம் நன்றாக ஒட்டிக்கொள்ளும். திரைப்படங்களில் கதாநாயகன் பின்னால் துரத்தி வரும் போலீஸ் துப்பாக்கிக் குண்டு தன் காரில் படாமல் காரை லாவகமாக வளைத்து வளைத்து தப்புவது போன்ற காட்சி எல்லாம் இந்த கருவியின் முன்பு நடக்காது என்றே கூறலாம்.

இது சாதாரணமான வேலையை செய்யவில்லை. இது எலக்ட்ரானிக் ஸ்டிக்கர் என்பதால் தப்பிய வாகனம் வளைவில் செல்கிறதா? இருட்டான பாதையில் செல்கிறதா?, எங்கு செல்கிறது போன்ற தகவல்கள் கட்டுப்பாட்டு அறையின் கணினிக்கு ஏறிக்கொண்டேயிருக்கும். கம்பியில்லா (வயர்லஸ்) நவீன தொலைக்கட்டுப்பாட்டு முறையின் முலம் தகவல்களை பெறமுடிவதுடன், நேர விரயமும் தடுக்கப்படுகிறது.


இந்த ஸ்டிக்கர் ராடார் உதவியுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை அனுப்பி விடுகிறது. அதுமட்டுமல்ல கார் எங்கெங்கெல்லாம் செல்கிறது என்ற தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றது. கண்ட்ரோல் அறையில் இருக்கும் அதிகாரியின் கணினிக்கு இந்த தகவல் உடனே சென்றுவிடுகிறது. இதனால் இந்தக் கார் எங்கு செல்கிறது என்ற விபரங்களை வைத்து அந்த இடத்திற்கு தகவல் கொடுத்து உடனே மடக்கி பிடித்துவிடுவார்கள். அப்புறம் என்ன! காரில் தப்பியவருக்கு தண்டனை தான்.

ஒருமுறை இந்த ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் போதும், ஸ்டார்சேஸ் சர்வரில் ராடார் மூலம் ஒவ்வொரு சில வினாடிகளுக்கொரு முறை தகவல் ஒலியுடன் தப்பிச் சென்ற வாகனத்தைப் பற்றிய விபரங்கள் வந்து கொண்டேயிருக்கும். இது மேலும் போலீஸ் துறையினரின் பணியை எளிதாக்கிவிடுகிறது.

புதுப்புது ஆராய்ச்சிகள் மூலம் ஏதாவது ஒரு துறை பயனடைந்து கொண்டுதானிருக்கின்றன. இம்மாதிரியான நவீன கருவிகள், அறிவியல் முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் எல்லாம் இயந்திரத்தனமாக வேகமாக இயங்க ஆரம்பித்துவிட்டது. இம்மாதிரியான புதுப்புது ஆராய்ச்சி கருவிகள் மூலம் வருங்காலத்தில் குற்றங்கள், இடர்கள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

« back

Add a new comment

Manifo.com - free website building